துரியாதீத தவம் செய்ய நன்கு துரியதவம் பழகவேண்டும் என்பது உண்மையா?
வணக்கம், அன்பர்களே, நம் வேதாத்திரிய யோகவழியில், தினமும் ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்துகிறோம் அல்லவா, அதில் இன்று கிடைத்த வாக்கின் விபரம் மற்றும் விளக்கம் காண்போம். கலந்துகொண்டோர் வாக்கு மொத்த எண்ணிக்கை 290Votes/17Likes.(இந்த பதிவு தரும் நேரத்தில் மட்டும்)
-
நிகழ்வில் கிடைத்த சரியான, அதிக, சிறப்பு வாக்குக்கள் என்ன? என்பதை காண்க!
அன்பர்களே, துரியாதீத தவம் செய்ய நன்கு துரியதவம் பழகவேண்டும் என்பது உண்மையா?
துரியதவம் நன்கு பழகிவிட்டால் நல்லதுதானே?! 77% (அதிக வாக்கு)
அன்பர்களே, யோக வரலாற்றில், சஸ்ரதாரா என்ற ஆயிரத்தெட்டு இதழ் தாமரை பெயர் கொண்ட, தலை உச்சி நிலையான, துரியம் என்ற ஆதாரமைய தவமே உயர்நிலை தவம் என்று இருந்தது. ஏறக்குறைய இப்போதும் அப்படித்தான் என்ற நிலை தொடர்கிறது. பெரும்பாலான யோக மையங்களில், துரிய தவத்திற்கு மேல்நிலையாக எந்த தவமும் இல்லை.
இதை நாம் இன்னும் விளக்கமாக பார்க்கலாமே!
குருமகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள், தன் இறையுணர்தல் வழியில், பல ஆண்டுகளாக, துரியதவம் இயற்றிவந்துள்ளார். எனினும் அவர் அதில் நிறைவடையாத தன்மையை உணர்ந்திருக்கிறார். துரியம் என்ற நிலைக்கு அப்பாலும் கூட மனம் விரிந்து நிற்பதையும், மேலும் மேலும் அதனிலும் விரிவதையும் கண்டு உணர்ந்து ஆராய்ச்சி செய்துள்ளார்.
வேதாத்திரி மகரிஷி அவர்கள், தொடர்ந்து, அந்த மனவிரிவை கவனித்து, முடிவான உண்மையில், பேராற்றலும் பேரறறிவுமான, சித்தர்கள் சொன்ன வெட்டவெளியில், சுத்தவெளியில் முழுமையடைவதை உணர்ந்தார். அதன்பிறகே மனம் தன் உண்மைநிலையை, அடித்தளமான நிலையையும் அடைந்ததை அறிந்துகொண்டார். மேலும் தொடர்ந்து ஆய்வு செய்து, அதை ஆர்வமுள்ள மற்றவர்களுக்கும் தர எண்ணியே, தவமாக வடிவமைத்தார். அந்த தவமே துரியாதீதம் ஆகும்.
இதை, தவத்தின் பெயராலேயே நாம் அறிந்துகொள்ளவும் முடியும்தானே? துரியம், துரியாதீதம். அதாவது துரியத்தின் அதீதம் துரியாதீதம் என்பதாக அமைந்திருக்கிறதே?! மேலும் தெளிவாக சொல்லுவதென்றால், துரியம் தீட்சை பெற்றுக்கொண்டு, தவம் இயற்றப்பழகி, அடுத்த மூன்று மாதங்களுக்குப் பிறகுதான் துரியாதீதம் தீட்சை பெறவேண்டும் என்று இருந்திருக்கவேண்டும். ஆனால் அன்பர்களின் ஆர்வம், தவ மையங்களுக்கு வந்து சேரும் நேரம் காலம், தற்கால வாழ்க்கைச்சூழல், ஆகியவற்றை கருத்தில் கொண்டு, 15 நாட்களுக்குள்ளாக எல்லா பயிற்சிகளும், வழங்கப்படுகிறது. இதனால் அன்பர்கள், படிப்படியான யோக உயர்வில், தடுமாறுகிறார்கள் என்று சொல்லலாம். ஆனால் இது தவறல்ல.
எனினும், துரிய தவம் நன்கு பயிற்சி பெறாமல், அந்த யோக அனுபவத்தை உணர்ந்திடாமல், உடனடியாக துரியாதீத தவம் இயற்றுவது, நல்ல புரிதலை நமக்கு தராது என்பது பொதுவான கருத்தாகும். என்றாலும் கூட, அன்பர்கள் விரும்பிச்செய்யும் தவமாக இருக்கையில், குறை ஒன்றும் சொல்லுவதற்கில்லை. எப்படி, எதை, செய்தாலும் கூட, அதற்கான அனுபவம் காலத்தால் கிடைக்கும் என்பதே உண்மை. எனவே உங்களுக்கு எப்படி சொல்லித் தரப்பட்டிருக்கிறதோ அதன்படியும், உங்கள் விருப்பத்தேர்வுபடியும் தொடர்ந்து தவம் இயற்றுக.
வாழ்க வையகம், வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.
0 Comments