யோகசாதனையின் ஆரம்ப கட்டத்தில், சாப்பிடும்பொழுதும், சில வேலைகளை செய்யும் பொழுதும் ‘ஆக்கினையில்’ நினைவை செலுத்த சொல்லுவது ஏன்?
வணக்கம், அன்பர்களே, நம் வேதாத்திரிய யோகவழியில், தினமும் ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்துகிறோம் அல்லவா, அதில் இன்று கிடைத்த வாக்கின் விபரம் மற்றும் விளக்கம் காண்போம். கலந்துகொண்டோர் வாக்கு மொத்த எண்ணிக்கை 191Votes/14Likes.(இந்த பதிவு தரும் நேரத்தில் மட்டும்)
-
கிடைத்த சரியான வாக்கு /அதிகமான வாக்கு என்ன? பாருங்கள்.
அன்பர்களே, யோகசாதனையின் ஆரம்ப கட்டத்தில், சாப்பிடும்பொழுதும், சில வேலைகளை செய்யும் பொழுதும் ‘ஆக்கினையில்’ நினைவை செலுத்த சொல்லுவது ஏன்?
அந்த செயல்களில் விழிப்புணர்வு பழக்கம் வரும் 68% (சரியான / அதிக வாக்கு)
அன்பர்களே, வேதாத்திரிய மனவளக்கலை யோகம் பயின்ற அனுபவம் கிடைக்கப் பெற்றிருப்பீர்கள். குரு மகான் வேதாத்திரி மகரிஷி நமக்கு வழங்கிய எளியமுறை குண்டலினி யோகமே, மனவளக்கலையாக மலர்ந்திருக்கிறது. ஒவ்வொரு மனிதருக்குள்ளும் உறைந்திருக்கும், குண்டலினி சக்தியை மேலேற்றி, அதை கவனித்து உண்மை விளக்கம் பெறுவதே நாம் கற்கும் பயிற்சியாகும்!
இதை நாம் இன்னும் விளக்கமாக பார்க்கலாமே!
நான் யார்? என்று தன்னை அறியவும், இறையுணர்வு பெறவும், குருவால் வழங்கப்படும் இந்த ‘குண்டலினி தீட்சை’ உதவுகிறது. எல்லோருக்கும் முதல்நிலை தீட்சை என்பது, மூலாதர சக்கரத்தில் இருந்து, குண்டலினியை உயர்த்தி, ஆக்கினை எனும் சக்கரத்திற்கு கொண்டுவருவதாகும். இங்கே சக்கரம் என்பது, ஆதார நிலை என்று அறிக.
ஆக்கினை என்பதே, இறையுணர்வுக்கான வாசல் என்று சித்தர்களால் போற்றப்படுகிறது. எனவே ஆக்கினையில் நல்ல அனுபவம் முக்கியமாக இருக்கிறது. எந்ததவம் செய்தாலும்கூட ஆக்கினையில் மனம் செலுத்தி தவம் செய்துவிட்டு பிறகு அடுத்த நிலைக்கு செல்வது என்று முறை அமைந்திருக்கும், சாந்தி தவம் தவிர.
ஆக்கினை என்பது, உடல், மன ரீதியில் நம் இயக்கங்களை, செயல்களை ஒழுங்குபடுத்தக்கூடிய தன்மை பெற்றது. இதனால், நம்முடைய சொல், செயல்களில் விழிப்புணர்வு கிடைக்கும். நமக்கு தீட்சை வழங்கும் பொழுதே, சுவை உணர்வில் நாம் கவனம் பெற, இனிப்பு வழங்குவதையும், ஒலி உணர்வில் நம் கவனம் பெற மணி ஒலிப்பதையும் கவனத்தில் கொள்க.
இந்த கவனமும், விழிப்புணர்வும் தொடர வேண்டும் என்பதற்காகவே, ஆக்கினை தவம் கற்ற ஒருவாரம் அல்லது அதற்கு மேலும், நாம் உணவு உட்கொள்ளும் பொழுதும், மற்ற வேலைகளை செய்யும் பொழுதும் சிறிது நேரம் ஆக்கினையில் நினைவைச் செலுத்த, ஆசிரியர் கேட்டுக்கொள்வார். அது ஏனென்றால், நாம் அந்த செயல்களில், விழிப்புணர்வு பெறுவோம் என்பதற்காகவே. கொஞ்ச நாள் பழகிவிட்டால், அது இயல்புத்தன்மைக்கு வந்து, எது நமக்கு வேண்டும், வேண்டாம், எது அளவு, எது மிகை, எது சரியான செயல், எது தவறான செயல் என்ற விளக்கம் நமக்கு கிடைத்துவிடும் என்பது உறுதி.
இதை நீங்களும் அனுபவத்தில் பெற்றிருப்பீர்கள் என்றே நம்புகிறேன். அப்படி இல்லை என்றாலும் கூட இன்றிலிருந்து ஒருவாரம், ஆக்கினையில் நினைவைச் செலுத்தி செயல்படுங்கள். இது தவம் அல்ல, நினைவை செலுத்துவது மட்டுமே!
வாழ்க வையகம், வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.
0 Comments