ஐந்தில் அளவு முறை
அமைதி எனும் சம உணர்வே, அறிவுக்கும் உடலுக்கும் பொருத்தமான உணர்வே, உண்மையான இன்பமாகும்.
உணவு, உழைப்பு, உறக்கம், பாலுறவு, எண்ணம் இவற்றில் அளவோடும், முறையோடும் செயலாற்ற வேண்டும். இந்த ஐந்தில் ஒன்றைக் கூட அலட்சியம் செய்வது கூடாது. அதாவது அடியோடு தடைப்படுத்தவோ, மிகவும் குறைத்துவிடவோ கூடாது; மிகுதியாகவும் கொள்ளக் கூடாது; முரண்பாடாக அனுபவிப்பதும் கூடாது.
விழிப்பு நிலையோடு மிதமாக உணவு, உறக்கம், உழைப்பு, உடலுறவு, எண்ணம் எனும் இவ்வைந்தோடு செயல்புரிய வேண்டும். இதனால் துன்பம் எழாமல் காக்கலாம். இயற்கையாக எழும் ஒரு துன்பத்தைக் குறைத்துக் கொள்ளும் அனுபவமே ஒரு இன்ப உணர்வு ஆகும். இன்பத்தை நாடி மிகுதியாக இவற்றை அனுபவிக்கும் போது, உயிராற்றல் மிகுதியாகச் செலவாகி அதன் விளைவாகத் துன்பம் மிகும். ஐம்புலன் கருவிகளின் நலமும், பொதுவாக உடல் நலமும் கெடும்.
மேலும், மனிதன் தனது உயிராற்றலின் மதிப்புணர்ந்து அதைப் போற்றிக் காத்து வரவேண்டும். மனிதனுக்கு உயிராற்றல் தான் ஒரு பெரும் நிதி, உடல் உறுப்புகளாலும், ஐம்புலன்களாலும் ஆற்றும் செயல்களில் உயிராற்றலானது அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் என்னும் பஞ்சதன்மாத்திரைகளாக மாற்றம் பெற்றுச் செலவாகிக் கொண்டே இருக்கிறது. இந்த உயிராற்றல் மிகுதியாகச் செலவாகாமல் காத்துவர வேண்டியது அவசியம். ஐம்புலன்கள் மூலமாக உயிராற்றல் மிகுதியாகச் செலவானால்
[1] ஐம்புலன் கருவிகள் கெடும்
[2] உயிராற்றலின் அளவும், அழுத்தமும் உடலில் குறைந்து உடல்நலம், மனநலம் இரண்டும் குழப்பமடையும்.
இதன் அவசியத்தை திருவள்ளுவர்,
“சுவை, ஒளி, ஊறு, ஓசை நாற்றமென்றைந்தின்
வகை தெரிவான் கட்டேயுலகு”
– என்று அருளியதையும் நினைவு கூற வேண்டும்.
விழிப்பு நிலையோடு ஐம்புலன்களின் இயக்கத்தை அளவுபடுத்திக் கொள்வதால் துன்பம் எழாமல் காக்கலாம்; நிலையான இன்பத்தையும், அனுபவிக்கலாம். நெறியுடன் வாழும் இத்தகைய வாழ்க்கை முறையால், தானும் நலமுடன், மகிழ்ச்சியுடன், அமைதியுடன் வாழலாம்; பிறரையும் நமது உதவியால் நலமாக வாழ வைக்கலாம்.
அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி
0 Comments