தவம் செய்யும் பொழுது எழும் எண்ண ஓட்டத்தை எப்படி நிறுத்துவீர்கள்?
வணக்கம், அன்பர்களே, நம் வேதாத்திரிய யோகவழியில், தினமும் ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்துகிறோம் அல்லவா, அதில் இன்று கிடைத்த வாக்கின் விபரம் மற்றும் விளக்கம் காண்போம். கலந்துகொண்டோர் வாக்கு மொத்த எண்ணிக்கை 306Votes/24Likes.(இந்த பதிவு தரும் நேரத்தில் மட்டும்)
-
கிடைத்த சரியான வாக்கு /அதிகமான வாக்கு என்ன? பாருங்கள்.
அன்பர்களே, தவம் செய்யும் பொழுது எழும் எண்ண ஓட்டத்தை எப்படி நிறுத்துவீர்கள்?
எண்ணத்தை எண்ணத்தால் ஆராய்ந்து ஓட்டினால் போதும் 72% (சரியான / அதிக வாக்கு)
அன்பர்களே, நாம் இன்னமும் சிந்தனையோடும், யோசனையோடும் இருக்கிறோம் என்பதற்கான ஒரு செயல்பாடே நமக்குள் எழும் எண்ணம்தானே! அப்படியான எண்ணத்தை நிறுத்த முடியுமா? நிச்சயமாக முடியாதுதான். ஆனால் அதை முறைப்படுத்தலாமே?! எப்படி?
இதை நாம் இன்னும் விளக்கமாக பார்க்கலாமே!
பொதுவாகவே ஒரு மனிதனுக்கு எண்ணம் ஓடிக்கொண்டேதான் இருக்கும். அதற்கு எந்த ஒரு காரணமும் தேவையும் இல்லை என்பதுதான் உண்மை. அதுபாட்டுக்கு ஓடிக்கொண்டே இருக்கும். நாம் நினைத்தாலும், நினைக்காவிட்டாலும் கூட. சிலநேரம் நமக்கே சலிப்பு வரவும் செய்யும். ஓடிக்கொண்டே இருக்கும் இந்த எண்ணத்தை கொஞ்சம் நிறுத்தினால்தான் என்ன? என்று முயற்சிபோம். அந்த அளவிற்கு எண்ணம் தாக்கம் கொண்டிருப்பார்கள்.
குரு மகான் வேதாத்திரி மகரிஷியின், மனவளக்கலையில் இணைந்துள்ள நமக்கு அவரின் வார்த்தையான ‘எண்ணத்தை அடக்க நிலைத்தால் அலையும், அறிய நினைத்தால் அடங்கும்’ என்பது எல்லோரும் சொல்லும் ஒன்று. ஆனாலும் நம்மால் முடியவில்லையே என்றுதான் புலம்புவார்கள். இதை நம் அன்பர்களும், பின்னூட்டத்தில் சொல்லியிருக்கிறார்கள்.
அதுவும் நாம், தவத்தில் அமர்ந்த சிறிது நொடிகளில், எண்ணம் பலவாறாக வந்து தாக்குவதையும், ஓட்டம் பலமாகிவிடுவதையும் நன்கு உணரலாம். ஆனால், எண்ணத்தை நிறுத்த முயற்சித்தால் தோல்விதான். சிலர், தவம் செய்வதை விட்டுவிட்டு அந்த எண்ணத்தின் வழியே பயணம் போவார்கள், அதுவும் நடக்கும்.
ஆனால், தவத்தில் அமர்ந்த உடனே, எழுகின்ற எண்ணத்தில், நாம் இணைந்து, இந்த எண்ணம் எதனால் எழுகிறது? என்று கொஞ்சம் ஆராயவேண்டும். அதாவது எண்ணத்தை எண்ணத்தால் ஆராய்ந்து பார்க்கவேண்டும். அதோடு, ‘சரி, எழுந்த எண்ணம் ஓடுவது இயல்பு, ஆனால் நான் இப்பொழுது தவம் அல்லவா செய்து கொண்டு இருக்கிறேன்’ என்று நாம் எண்ணி, ஓடுகின்ற எண்ணத்தோடு இணைத்துக்கொள்ள வேண்டும்.
இப்படி நாம் நினைத்தமாத்திரத்தில், எண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக நிலைக்கு வந்து, தவத்திற்கு துணையாக நிற்கும். ஆனாலும் மறுபடி ஏதேனும் ஒரு எண்ணம் தாக்கி, மறுபடியும் ஓடத்துவங்கும். ‘இல்லை நான் தவம் செய்கிறேன்’ என்று மீண்டும் எண்ணிக்கொள்ள வேண்டும். இப்படியாக பழகப்பழக, எண்ணம் ஓர் நிலைபெற்று அடங்கி நிற்கும். எப்போதுவரை தெரியுமா? நீங்கள் தவம் செய்து முடிக்கும் வரைதான். தவம் முடித்துவிட்டால், மறுபடி அது அதன் போக்கில் ஓடத்துவங்கும் என்பதுதான் நிஜம்.
பராவாயில்லை, நாம் தான் தவம் முடித்துவிட்டோம் அல்லவா? இனி கவலையில்லை. எனவே, தவம் செய்யும் பொழுது, எண்ண ஓட்டம் நிகழ்ந்தால், ஓடுகின்ற எண்ணத்தை எண்ணதாலே ஆராய்ந்தும் அதனோடு கொஞ்சம் ஓட்டினால், தானாக நிலைக்கு வந்துவிடும் என்பது உறுதி!
வாழ்க வையகம், வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.
-
நன்கொடைகள் (Donate) வழங்க:
UPI: 9442783450@UPI
GPay: 9442783450@okhdfcbank
WhatsApp: 9442783450.wa.qvi@wahdfcbank
Bhim UPI: 9442783450@upi
PhonePe: 9442783450@ybl
Present by:
0 Comments