Ticker

6/recent/ticker-posts

What I need to reach higher level in Vethathiriyam?

வேதாத்திரிய யோகத்தில் உயரவேண்டும் என்றால் எனக்கு...!


வணக்கம், அன்பர்களே, நம் வேதாத்திரிய யோகத்தில், தினமும் ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்துகிறோம் அல்லவா, அதில் இன்று கிடைத்த வாக்கின் விபரம் மற்றும் விளக்கம் காண்போம். கலந்துகொண்டோர் வாக்கு மொத்த எண்ணிக்கை 438 Votes/28 Likes.(இந்த பதிவு தரும் நேரத்தில் மட்டும்)

-

நிகழ்வில் கிடைத்த சரியான, அதிக, சிறப்பு வாக்குக்கள் என்ன? என்பதை காண்க!

வேதாத்திரிய யோகத்தில் உயரவேண்டும் என்றால் எனக்கு...!

வேதாத்திரிய விளக்கங்களை நானே ஆராய்ந்து கொள்வது போதும் 16% (சரியான  வாக்கு)

ஞான ஆசிரியரின் அக்கறையும் உதவியும் தேவைப்படுகிறது 50% (அதிக வாக்கு)

அடிக்கடி இணைய / நேரடி வகுப்புக்கள் தேவைப்படுகிறது 17% (சிறப்பு வாக்கு)

இன்னும் பலப்பல தவ பயிற்சி விளக்கங்கள் தேவைப்படுகிறது 15%

எந்த வகையிலும் எனக்கு புரிகிறமாதிரி கிடைப்பதில்லை! 3%

-

அன்பர்களே, வேதாத்திரி மகரிஷி வழங்கிய மனவளக்கலையில், கற்றுத்தேர்ந்த நாம் அந்த வேதாத்திரிய யோக பயணத்தில் உயரவேண்டும் என்பது பொதுவான விருப்பமாகும். நேரடியாக குரு மகான் வேதாத்திரி மகரிஷி வாழ்ந்து வந்த காலத்தில், அன்பர்கள் தங்களுக்கான விளக்கங்களை, அவரிடமே பெற்றுக்கொண்டார்கள் என்று சொல்லலாம். மகரிஷி அவர்கள், தன்னை வான்காந்தத்தில் கலந்துகொண்டுவிட்ட பிறகு அதில் கொஞ்சம் தொய்வு இருப்பதாக சிலர் நினைக்கலாம். அவர்களுக்காகவே இந்த வாக்கெடுப்பு நிகழ்த்தப்பட்டது. 

இதை நாம் இன்னும் விளக்கமாக பார்க்கலாமே!

இந்த தொய்வு என்பது, உண்மை அல்ல! ஏனென்றால் குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள், தன்னுடைய வாழ்நாள் முழுவதும், முழுமையாக எல்லாவகையிலும் தவ, தத்துவ விளக்கங்களை, உண்மைகளை எல்லோருக்கும் சேரும் வகையில் சொல்லிவிட்டார். அதை மிகச்சரியாக வரலாற்றில் பதிவும் செய்துவிட்டார். பல தலைப்பிலான கவிதைகளும், கட்டுரைகளும், நூல்களும் எழுதி வெளியிட்டுள்ளார். குரல்பதிவாகவும், காணொளி பதிவாகவும் எண்ணற்ற நிகழ்வுகளையும் பதிந்துள்ளார். எல்லாவற்றையும் நிறைவு செய்த திருப்தி நிச்சயமாக அவர் பெற்றிருந்தார் என்பதுதான் உண்மை. 

அத்தகைய முழுமையான, விளக்கங்களை, உண்மைகளை  நாம்தான் இன்னமும் சரியாக தெரிந்து கொள்ளவில்லை, அறிந்து கொள்ளவில்லை, உணர்ந்து கொள்ளவில்லை எனலாம். உங்களுக்குத்தெரியுமா? குரு மகான் மகரிஷி அவர்களிடம் அப்போதும் கூட, இன்னமும் சில தவங்கள் வேண்டும். இன்னும் இதில் விளக்கம் வேண்டும் என்று பலமுறை கேட்டிருக்கிறார்கள். காரணம், அப்படி கேட்டவர்கள் ஏற்கனவே இருந்த தவங்களை முழுமையாக செய்யவில்லை, கொடுத்த அந்த உண்மைகளை, விளக்கங்களை படிக்கவில்லை! அதை ஏற்றுக்கொள்ளாமல், மகரிஷி ஏதோ மறைக்கிறார் என்கிற ரீதியாக கூட கேட்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட நிலையில் உள்ளவர்கள் மாற்றம் பெற்றார்களா? என்பது தெரியவில்லை. இன்று அப்படியான அன்பர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள். மனவளக்கலை நூல் பாகம் மூன்றையும் வாங்கி வைத்திருக்கிறார்களே தவிர, ஒருபொழுது முழுதாக படித்தார்களா? ஞானக்களஞ்சியம் கவிதை நூல் தொகுப்பு இரண்டு உள்ளது. அதை என்றாவது வாசித்து கருத்து அறிந்தார்களா? இப்படி எல்லாமே கைவசம் இருந்தும், விளக்கம் மற்றும் உண்மைகளை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

உண்மையாக, அடிப்படைப் பயிற்சி முடித்த நாள்முதல், ஆர்வம், முயற்சி, செயல்பாடு நிலையோடு, மனவளக்கலை மன்ற செயல்பாடுகளில் கலந்து வருபவர்கள், அகத்தாய்வு நான்கு நிலைகளில் தேர்ச்சி பெற்று, பிரம்மஞானம் பெற்று பிறகு பிற அன்பர்களுக்கு கற்றுக்கொடுக்கும் அருள்நிதியாகவும் உயரலாம். அந்த அனுபவத்திற்குப் பிறகு உலகெங்கும் கற்றுக்கொடுக்கும் துணை பேராசிரியராகவும், பேராசிரியராகவும் உயரலாம். ஆனால் எங்கோ அவர்கள் நின்றுவிட்டு, யாராவது உதவுவார்கள் என்று எதிர்பார்க்கின்றனர். உண்மையாகவே ‘பிரம்மஞானம்’ பெற்ற நிலையிலேயே உங்களுக்கான, நிறைவுப்பாடம் கிடைத்துவிட்டது. குரு மகான் வேதாத்திரி மகரிஷி அமைத்துத் தந்த பாடங்கள் அப்படிப்பட்டது என்பதில் சந்தேகமே இல்லை. அந்த நிலையில் நீங்கள் கற்றதை மட்டுமே மறுசுழற்சியில் படித்து ஆராய்ந்து வந்தாலே, உங்கள் வேதாத்திரிய பயணத்தில் வெற்றி கிடைத்துவிடும்! 

இணையவழி / நேரடி வகுப்புக்கள் நிகழ்வு, ஞானாசிரியரின் அக்கறை, உதவி, மற்ற ஆசிரியர், பேராசியர், முதுநிலை பேராசிரியர் ஆகியோரின் அனுபவமான விளக்கங்கள் உறுதுணையாக இருக்குமே தவிர, நீங்க கற்ற பாடங்கள் தரும் முழுமையை தந்துவிடாது என்பதை புரிந்துகொள்க. எனவே, வேதாத்திரிய விளக்கங்களை நானே ஆராய்ந்து கொள்வது போதும் 16% (சரியான  வாக்கு) என்பதையே ஏற்று இந்த வாக்கெடுப்பை நிறைவு செய்வோம்!

வாழ்க வையகம், வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.

-

Post a Comment

0 Comments