நமக்கு துன்பம் தரும் எதிரியை வாழ்த்தினால் சரி செய்துவிடலாம் என்றால் நம்ப முடிகிறதா?
வணக்கம், அன்பர்களே, நம் வேதாத்திரிய யோகவழியில், தினமும் ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்துகிறோம் அல்லவா, அதில் இன்று கிடைத்த வாக்கின் விபரம் மற்றும் விளக்கம் காண்போம். கலந்துகொண்டோர் வாக்கு மொத்த எண்ணிக்கை 462Votes/38Likes.(இந்த பதிவு தரும் நேரத்தில் மட்டும்)
-
நிகழ்வில் கிடைத்த சரியான, அதிக, சிறப்பு வாக்குக்கள் என்ன? என்பதை காண்க!
அன்பர்களே, நமக்கு துன்பம் தரும் எதிரியை வாழ்த்தினால் சரி செய்துவிடலாம் என்றால் நம்ப முடிகிறதா?
நிச்சமாக காலத்தால் மாறிடும் சரியாகும் உண்மை 77% (அதிக வாக்கு)
-
அன்பர்களே, வாழ்த்து என்பதின் மகத்துவம் எல்லோரும் அறிந்ததே. ஆனால் பெரும்பாலோர்க்கு அதில் நம்பிக்கை இல்லை. உலகில் வாழ்ந்து வயது முதிர்ந்த பெரியோர்களின் ஆசிகளை, இளைஞோர் வணங்கி ஏற்பார்கள். இப்போது அது அந்தக்காலம் என்றே ஆகிவிட்டது. இளைஞோர் பெரியோரை வணங்குதலே ஏதோ அடிமைத்தனம் என்று கருதிவிட்டார்கள். ஏதோ ஒரு சில குடும்பங்களில் மட்டுமே இன்னும் தொடர்கிறது எனலாம். அதுபோலவே பெரியவர்கள், சிறியவர்களை வாழ்த்தக்கூடிய சந்தர்ப்பம் அமையவே இல்லை என்பதும் உண்மை.
இதை நாம் இன்னும் விளக்கமாக பார்க்கலாமே!
பரபரப்பான இந்த உலக ஓட்டம், வயது வித்தியாசம் இன்றி எல்லோருக்கும் ஒட்டிக்கொண்டது. ஒரு குழந்தைக்கு மூன்று வயது நிறைந்துவிட்டாலே அதுவும், இந்த உலக ஓட்டத்தில் தன்னை இணைத்துக் கொள்கிறது அல்லது பெற்றோர்கள் அக்குழந்தையை ஓட்டத்தில் இணைத்து விடுகிறார்கள். இதில், இந்த பரபரப்பான உலக ஓட்டத்தில் வாழ்த்தாவது ஒன்றாவது என்று கருதவும் இடமிருக்கிறது. அப்படியான சூழலில், ஒரு எதிரியை வாழ்த்துவதா? என்று கேள்விதானே எழும்? அதுதான் இங்கே வாக்குப்பதிவாக அமைத்தோம். ஆனாலும் 77% அன்பர்கள் நம்பிக்கையோடு இருக்கிறார்கள். மகிழ்ச்சி.
குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் மட்டுமே, ‘வாழ்க வளமுடன்’ என்ற வாழ்த்தையும் மந்திரமாக சொல்லி, அதன் மகிமையையும் நமக்கு விளக்கித் தந்திருக்கிறார் எனலாம். ஒரு வாழ்த்து சொல்லும் பொழுது அது சொல்லுபவரை முதலில் ஊக்குவிக்கிறது. பிறகு யாரை நினைத்து சொல்லுகிறோமோ அவருக்குப் போய்ச்சேர்கிறது. அலைவடிவாக அவரிடம் போய்ச்சேர்வதால், அவர் அதை தடுக்கவோ, மறிக்கவோ, விலக்கிடவோ வழியும் இல்லை.
தனியாக ஒரு எதிரியிடம் நாம் பேசக்கூட முடியாதுதானே? ஆனால் மௌனமாக நாம் தருகிற வாழ்த்தால் அவரின் தொல்லைகளை நிறுத்தலாம், தடுக்கலாம், காப்பு பெறலாம். அந்த எதிரியிடமிருந்து நிம்மதியை பெறலாம். இது நம்பிக்கை அடிப்படையிலான வாழ்த்து அல்ல. நாமே விரும்பி, மாற்றம் செய்யும் செயல்முறை ஆகும். இதில் இயற்கையின் விதி விளைவுக்கு உட்பட்ட செயலும் விளைவும் அடங்கியிருக்கிறது. அதனால் நிச்சயமாக பலனும் அளிக்கிறது. தூய்மையான, நல்ல நோக்கத்திலான, முறையான உங்கள் வாழ்த்து நிச்சயமாக பலன் அளிக்கும் என்பது உறுதியே!
வாழ்க வையகம், வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.
0 Comments