Ticker

6/recent/ticker-posts

The Secret Philosophy

 உலக தத்துவ இரகசியம்


நாம் ஆற்றை பார்க்கிறோம். ஆற்றில் தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கிறது. தொடர்ந்து ஓர் ஆறு நிரந்தரமாக இருக்கிற மாதிரி தெரிகிறது. ஒரு நிமிடத்துக்கு முன்னால் ஆற்றிலே நாம் பார்த்த தண்ணீர் இப்போது அந்த இடத்திலே இல்லை. அது போய்விட்டது. புதிதாகத் தான் இப்போது நீர் வந்து கொண்டிருக்கிறது. ஆனாலும், தொடர்ந்து ஒர் ஆறு இருப்பதாக வைத்துக் கொள்கிறோம். அது போன்றதே மனம் என்ற ஒரு இயக்கம். உயிரினுடைய ஆற்றல் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கிறபோது அந்த அலை வந்து கொண்டே இருக்கிறது.


அதை எந்தெந்த இடத்தில் பாய்ச்சுகிறோமோ, அந்தப் பாய்ச்சலுக்குத் தக்கவாறு இங்கே பதிவைக் கொடுத்துவிட்டுப் போய்க்கொண்டே இருக்கிறது. மனம் ஒரு நிரந்தரமான (Permanent) பொருள் இல்லை. தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கக் கூடிய ஓர் இயக்கம் தான். அது போலத்தான் ஒளியும். விளக்கிலிருந்து அலை அலையாய் ஒளி, ஒளியலை வந்து கொண்டேயிருக்கிறது; அது வெளிச்சமாக இருக்கிறது. அந்த ஒளி நிரந்தரமாக இருக்கின்றதா என்றால் இல்லை. ஸ்விட்சை நிறுத்திய உடனே இருட்டு வந்து விடுகிறது. நிரந்தரமாய் இருப்பதாய் இருந்தால் சிறிது நேரம் இருந்துவிட்டு மெதுவாய் அல்லவா குறைய வேண்டும்? தொடர்ந்து வரவில்லையாதலால் இருந்தது உடனே போய்விட்டது. எவ்வளவு சீக்கிரம் அது போய்விட்டது பாருங்கள்.


அது போல ஒரு இயக்கத்திலே இருந்து அலை பிறக்கிறது. அந்த அலையானது இடத்துக்குத் தகுந்தவாறு மோதி அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் என்ற ஐந்தாகவும், அதை உணர்ந்து கொள்ளக்கூடிய மனமாகவும் இயங்கும் உண்மையைத் தெரிந்து கொண்டால், உலக தத்துவ இரகசியம் அத்தனையும் புரிந்து கொள்ளலாம். காரணம், மனத்தால் அன்றி வேறு எதனால் உலகத்தை அறிகின்றோம்? எந்தத் தத்துவத்தைத் தான் அறிகின்றோம்?


அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி


Post a Comment

0 Comments