உங்களுடைய குழந்தையை திருத்துவதில் நீங்கள் தோற்றுப் போகிறீர்களா?
வணக்கம், அன்பர்களே, நம் வேதாத்திரிய யோகாவில், தினமும் ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்துகிறோம் அல்லவா, அதில் இன்று கிடைத்த வாக்கின் விபரம் மற்றும் விளக்கம் காண்போம். கலந்துகொண்டோர் வாக்கு மொத்த எண்ணிக்கை 180Votes/12Likes.(இந்த பதிவு தரும் நேரத்தில் மட்டும்)
-
நிகழ்வில் கிடைத்த சரியான, அதிக, சிறப்பு வாக்குக்கள் என்ன? என்பதை காண்க!
அன்பர்களே, உங்களுடைய குழந்தையை திருத்துவதில் நீங்கள் தோற்றுப் போகிறீர்களா?
ஆம் பலமுறை தோற்றேன் இன்னும் தோற்கிறேன் 33% (அதிக வாக்கு)
அப்படியெல்லாம் இல்லை என் குழந்தைகள் சிறப்பு 27% (சிறப்பு வாக்கு)
அடிக்கடி சில முரண்பாடுகள் எழுவதுண்டு வேற வழி? 23% (சிறப்பு வாக்கு)
பெரும்பாலும் திருத்துவதில் அப்படி தோற்பதில்லை 10% (சிறப்பு வாக்கு)
அன்பர்களே, குழந்தைகளை வளர்த்தெடுப்பது என்பது மிகப்பெரும் கலை. குழந்தை ஒரு வடிவப்பொருள் என்று சொல்லலாம். ‘எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே’ என்று ஒருபாடலின் வரி கூட உண்டு. மேலும் குழந்தைகள் நம் சந்தோசத்தின் வெளிப்பாடு மட்டுமல்ல, சந்தோசத்தின் மூலமே அவர்கள்தான் எனலாம்!
இதை நாம் இன்னும் விளக்கமாக பார்க்கலாமே!
ஒரு குழந்தை தானாகவே வளரக்கூடிய தன்மையை, தனக்குள் வைத்திருக்கிறது எனலாம். தனக்கு நிகழும் நிகழ்ச்சிகளை வைத்தும், தன்னைச்சுற்றி இருக்கும் சூழ்நிலையைக் கொண்டும் தன்னை திருத்தவோ, மாற்றியமைக்கவோ அக்குழந்தையால் முடியும். யாரேனும் சொல்லித்தான் தரவேண்டும் என்ற நிலை அவர்களுக்கு இல்லை. இயற்கையாகவே தானே கற்றுக்கொள்ளும் திறமை அவர்களுக்கு உண்டுதானே?!
ஆனாலும், ஒரு குழந்தை எப்படி இருக்கவேண்டும்? எப்படி வளரவேண்டும்? நமக்கும் நம் குடும்பத்துக்கும், பிறருக்கும், சமுதாயத்திற்கும் எப்படியாக பயன் தரதக்க அளவில் வளர்த்து ஆளாக்கவேண்டும் என்பது, பெற்றோர்களாகிய நம் கடமை எனலாம். இதில் வேறு யாரேனும், உள்நுழைந்து செயல்பட வழியில்லை அதற்கு உரிமையும் இல்லை. ஆனாலும், முன்பே சொன்னது போல, குழந்தை வளர்ப்பு என்பது கலை, அதை நாம் மிகச்சரியாக செய்யாவிட்டால், பாதிக்கப்படுவது, நாமும் நம் குடும்பமும் மட்டுமல்ல என்பதையும் நாம் அறிவோம்.
குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள், குழந்தை என்பது நம் வாழ்வின் நீட்சி, நம் கர்மாவின் தொடர்ச்சி என்று சொல்லுகிறார். மேலும் குழந்தைகளே நம்முடைய மறுபிறவி என்றும் குறிப்பிடுகின்றார். இந்த உண்மைகளை நாம் உணர்ந்துகொண்டால், நம் குழந்தைகளை எப்படி வளர்த்தெடுக்கவேண்டும் என்ற உண்மையும் நமக்கு தெரிந்துவிடும் அல்லவா?
ஒரு குழந்தையை நாம் திருத்தவேண்டும் என்பது ஏன்? முன்னமே அக்குழந்தையின் வளர்ப்பில், ஏதோ தவறு நிகழ்ந்திருக்கிறது. அது நம்மிடம் இருந்தா? பிறரிடம் இருந்தா? இந்த சமூகத்தின் வழியாகவா? இக்குழந்தை தானாக பெற்றுக்கொண்டதா? என்ற கேள்விகளின் வழியாக ஆராயலாம். குழந்தையை திருத்துகிறேன் என்று அடிப்பதோ, கண்டிப்பதோ கூடாது. அது அவர்கள் மனதை பாதிக்கும். அவர்கள் வழியை மாற்றவும் கூடும். எனவே அவர்களோடு சமமாக பேசி, அவர்கள் நிலையில் நின்று, விளக்கம் அளித்து, இதெல்லாம் தவறு, திருத்திக்கொள். இதைத் தொடர்ந்தால் இப்படியெல்லாம் தவறான விளைவுகள் வரும், அதன் பாதிப்பு இந்தமாதிரியான வாழ்வியல் பிரச்சனைகளை உருவாக்கும் என்று சொல்லி விளக்க முயற்சிக்க வேண்டும். இக்கால குழந்தைகள், புரிந்து கொள்ளுவதில் மிக முன்னேற்றம் பெற்றிருக்கிறார்கள் என்பதால் உடனே திருத்திக் கொள்வார்கள் என்பதே உண்மை. நமக்கு பொறுமை மிக அவசியம் என்பது இங்கே குறிப்பிடவேண்டும்.
எனவே தோற்றுப்போகிறேன் என்று நினைக்காமல், உங்கள் குழந்தையை, இயல்பாக, அதன் அளவில் இறங்கி நின்று பேசிப்பழகி உண்மையை விளக்கப் பழகுங்கள். அவர்களுக்கும் உங்களுக்குமான புரிதலை அதிகமாக்குங்கள். நன்மை விளையும். நமக்குள் நாம் இத்திருத்தங்களை முயற்சிக்க வேண்டியதும் அவசியமாகும்.
வாழ்க வையகம், வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.
0 Comments