Ticker

6/recent/ticker-posts

What kind of help needful in your journey of Vethathiriyam?

வேதாத்திரிய பயணத்தில் இன்னும் எந்தவகையில் உங்களுக்கு உதவி தேவைப்படுகிறது?


வணக்கம், அன்பர்களே, நம் வேதாத்திரிய யோகத்தில், தினமும் ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்துகிறோம் அல்லவா, அதில் இன்று கிடைத்த வாக்கின் விபரம் மற்றும் விளக்கம் காண்போம். கலந்துகொண்டோர் வாக்கு மொத்த எண்ணிக்கை 307Votes/23Likes.(இந்த பதிவு தரும் நேரத்தில் மட்டும்)

-

நிகழ்வில் கிடைத்த சரியான, அதிக, சிறப்பு வாக்குக்கள் என்ன? என்பதை காண்க!

அன்பர்களே, வேதாத்திரிய பயணத்தில் இன்னும் எந்தவகையில் உங்களுக்கு உதவி தேவைப்படுகிறது?

இன்னும் முழுமையான தெளிவான விளக்கங்கள் தேவைப்படுகிறது 29% (அதிக வாக்கு)

எல்லாமே மகரிஷியால் கிடைத்துவிட்டது ஆனால் தொடர முடியவில்லை 23% (சிறப்பு வாக்கு)

பயணம் சிறப்பாகவே இருக்கிறது நான்தான் இன்னும் பயணிக்கவில்லை 21% (ஏற்பு வாக்கு)

வாழ்வில் இருக்கிற பிரச்சனைகள்தான் தடையாகிறதே தவிர ஏதுமில்லை 16% (ஏற்பு வாக்கு)

ஒரு நல்ல சகபயணி கிடைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் 12% (ஏற்பு வாக்கு)

-

அன்பர்களே, அவ்வப்பொழுது வேதாத்திரியத்தில் நம்முடைய வளர்ச்சியை ஆய்வு செய்யும்படியாக இப்படி சில வாக்கெடுப்பு தேவைப்படுகிறது. நாம் இங்கே, வேதாத்திரியத்தை தொடர்வதால், கிடைக்கும் முடிவுகள் வழியாக உண்மை அறியலாம். அதன் வழியாக என்ன மாற்றம் நிகழ்ந்திருக்கிறது என்றும், என்ன மாற்றம் தேவை என்றும் புரிந்துகொள்ளலாம். ஆனாலும் இதில் அன்பர்களின் நிலையையும் புரிந்துகொள்ள முடியும். அதாவது அவர்களின் ஆர்வம், முயற்சி, வெற்றி ஆகியவற்றை உள்ளீடாக காட்டிவிடும்.

இதை நாம் இன்னும் விளக்கமாக பார்க்கலாமே!

குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள், தன்னுடைய வாழ்நாளின் பெரும்பகுதியை, வேதாத்திரியத்தின் வழியாக, நம்மை, உலகில் உள்ள பருவம் வந்த ஓவ்வொருவரையும் முக்கியமாக கருதி, பிரம்ம ஞானம் என்ற மெய்ப்பொருள் உண்மையை புரிந்து, ஏற்று, நம்மை வாழ்வில் மகிழ்வாக, நிறைவாக வாழவும், அதன்வழியே நம் குழந்தைகளை வழிநடத்தவும் பாதை வகுத்துத் தந்துள்ளார்.

தன்னுடைய 96 வயதுவரையிலும், அன்பர்களுக்கு விளக்கம் அளிப்பதையே கடமையாகவும் கொண்டார். முழுமை நிறைவிலே, திருப்தியாகவே தன்னை வான்காந்தத்தில் நிறைத்துக் கொண்டார் என்பதும் உண்மை. எனவே எல்லாமே மகரிஷியால் கிடைத்துவிட்டது என்பது மிகச்சரியானது தான். ஆனால் இதை அன்பர்கள் 23% (சிறப்பு வாக்கு) நிலை தந்திருக்கிறார்கள். இந்த வாக்கெடுப்பில் வெற்றி மதிப்பு இதுதான். என்றாலும் கூட என்னால் தொடர முடியவில்லை என்று வருந்துகிறார்கள். இது ஏன்? என்றால் அதற்கு பலவித காரணங்களை அடுக்கிட முடியும் என்றாலும் அது இங்கே தேவையில்லை.

இன்னும் முழுமையான தெளிவான விளக்கங்கள் தேவைப்படுகிறது 29% (அதிக வாக்கு) என்று முதன்மையாக கிடைத்திருக்கிறது. ஆனால் உண்மை என்ன தெரியுமா? நேரடியாக குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்களின் உரையை, உங்களில் பலர் கேட்பதில்லை. அதுபோலவே அவரின் நூல்களான மனவளக்கலை, ஞானக்களஞ்சியம், ஞானமும் வாழ்வும் போன்ற முதன்மை நூல்களையும், பிற தலைப்பிலான நூல்களையும் வாசிப்பதில்லை. ஆனாலும் எங்களுக்கு விளக்கம் வேண்டும் என்கிறார்கள். இவர்கள் வேதாத்திரியத்தின் வழியாக கற்றுத்தேர்ந்த ஆசிரியர்களின் வழிகாட்டலை ஏற்கிறார்களா? என்பதும் தெரியவில்லை. நாமாகவே தேடிப்போய் பெறுவது ஒன்றுதான் சரியான வழி. எந்த விளக்கமும் நம்மைத்தேடி வருவதில்லை. எனவே இந்த அதிகவாக்கு உண்மையற்று போய்விடுகிறது!

அடுத்ததாக, பயணம் சிறப்பாகவே இருக்கிறது நான்தான் இன்னும் பயணிக்கவில்லை 21% (ஏற்பு வாக்கு) என்கிறார்கள். இதற்கு அவர்களின் வாழ்வியலும், குடும்ப, வேலை சூழலும் காரணமாகும். மேலும் அவர்களின் கர்ம வினைப்பதிவுகளின் தாக்கமும் இருக்கும் என்று நம்பலாம். இதற்கு பதில் தரும் விதமாகவே அடுத்த வாக்குகள் அமைகின்றன. அது, வாழ்வில் இருக்கிற பிரச்சனைகள்தான் தடையாகிறதே தவிர ஏதுமில்லை 16% (ஏற்பு வாக்கு) என்பதுதான். இதை மாற்றிக்கொள்ள வழி என்னவென்றால், உங்களுடைய தன்னம்பிக்கை, ஊக்கம், முயற்சி, செயல்பாடு ஆகியன உதவிடும்.

நிறைவாக, ஒரு நல்ல சகபயணி கிடைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் 12% (ஏற்பு வாக்கு) என்று முடிவு தந்திருக்கிறார்கள். மகரிஷியின் வார்த்தையிலேயே சொன்னால், இது அவசியமற்றது. உங்களுடைய தேவைக்கும், மாற்றத்திற்கும் நீங்களே காரணகர்த்தா என்பதால், இன்னொருவரை நம்புவதும், எதிர்பார்ப்பதும் தவறு. அது மேலும் உங்களை, பயணத்தில் தடையை ஏற்படுத்துமேயன்றி, உதவ வழியில்லை. இதற்கு மாற்றுவழி என்ன? சக பயணியை தேடுவதற்கு பதிலாக, குருவை துணை கொள்ளுங்கள். போதுமே?!

கலந்து கொண்ட எல்லா அன்பர்களையும், மெய்ப்பொருளோடு மனமொன்றி நின்று, வாழ்த்தி மகிழ்கிறேன். நன்றி.

வாழ்க வையகம், வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.

-

Post a Comment

0 Comments