Ticker

6/recent/ticker-posts

How to fix the problems in the wedding life?

கணவன் மனைவி இருவருக்கான பிரச்சனையில் இன்னொருவர் தலையிடலாமா?


வணக்கம், அன்பர்களே, நம் வேதாத்திரிய யோகவழியில், தினமும் ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்துகிறோம் அல்லவா, அதில் இன்று கிடைத்த வாக்கின் விபரம் மற்றும் விளக்கம் காண்போம். கலந்துகொண்டோர் வாக்கு மொத்த எண்ணிக்கை 346Votes/26Likes.(இந்த பதிவு தரும் நேரத்தில் மட்டும்)

-

நிகழ்வில் கிடைத்த சரியான, அதிக, சிறப்பு வாக்குக்கள் என்ன? என்பதை காண்க!

அன்பர்களே, கணவன் மனைவி இருவருக்கான பிரச்சனையில் இன்னொருவர் தலையிடலாமா?

ஒருபோதும் கூடாது, அவர்களே விட்டுக்கொடுத்து தீர்க்கனும் 75% (அதிக வாக்கு)

-

அன்பர்களே, இல்லறம் என்பதன் வார்த்தையிலேயே, உண்மையான விளக்கமாக, இல்லத்தில் எது அறம் என்று சொல்லுகிறோமோ அதை கடைபிடித்து வாழ்வது என்பதாகிவிடுகிறது. கணவன் மனைவி என்ற ஓர் அமைப்பு அவர்களுக்கு மட்டுமல்ல, அவர்களால் உருவாகும் வாரீசுகளுக்கும், இந்த சமூகத்திற்கும், உலகிற்கும் ஏற்பான, உயர்வான, மதிக்கத்தக்கது என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்!

இதை நாம் இன்னும் விளக்கமாக பார்க்கலாமே!

இந்த உலகில், ஆண் ஒரு குடும்பத்திலும், பெண் ஒரு குடும்பத்திலும் பிறந்து வளர்ந்து, தகுந்த காலம் வருகையில், திருமணம் என்ற நிகழ்வில் கணவன் மனைவியாக உயர்வு பெறுகின்றனர். சிலரது வாழ்வில் அது காதல் என்று ஆரம்பித்து, கணவன் மனைவியாக வாழ்கின்றனர். முக்கியமாக, இந்த திருமணம் சமூகத்தை சார்ந்த பெரியோர்கள் முன்னிலையில் நிகழ்கிறதையும், அது பதிவு செய்யபடுவதையும் அறிவீர்கள். காரணம், கணவனான ஆணுக்கும், மனைவியான பெண்ணுக்கும் சாட்சியாக இம்மக்கள் இருந்துவிடுகின்றனர். இதனால் கணவன், மனைவி இருவரும் இணைந்து வாழவும், ஒருவருக்கொருவர் சார்ந்தும், அதன்வழியாக பிறக்கும் குழந்தைகளை வளர்த்து ஆளாக்கும் கடமையும் வந்துவிடுகிறது.

தற்கால பொருள்முதல்வாத உலகில், பணமும், மனமும் பலப்பல பிரச்சனைகளை உண்டாக்குகிறது என்பதை நாம் அறிவோம். அவ்வகையில் கணவன் மனைவி ஆகியோருக்கு இடையே பிரச்சனைகள் எழுவதும் இயல்பானதே. ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதற்கே பல ஆண்டுகள் ஆகலாம் என்பது உறுதியான உண்மை. இதற்கிடையில் அன்பு, பாசம், சண்டை, சச்சரவு, ஊடல், கூடல் என்று பலவகையில் உணர்வுகள் எழும். இங்கே கணவனைச் சார்ந்து வாழவேண்டிய நிலை, மனைவிக்கு இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஏற்கனவே மனைவியானவள், தன் வீட்டை விட்டு, பெற்றோரை விட்டு, ஊரை விட்டு இன்னொரு குடும்பமான கணவன் குடும்பத்தில் இணைகிறாள் என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். இதை துறவு என்று கூட வேதாத்திரி மகரிஷி சொல்லுகிறார். அப்படியான மனைவியை அன்புபாராட்டுவதுதான் கணவனின் கடமை. அந்த அன்புக்கு மறுமொழி தருவதான் மனைவியின் கடமை.

எனவே பிரச்சனை என்று எழுந்தால், வேதாத்திரி மகரிஷி அறிவுறுத்தியதுபோல ‘யாருக்கு அதிக அன்பு இருக்கிறதோ, அவர்கள் விட்டுக்கொடுத்து போகவேண்டும். மறுபடி பிரச்சனை எழாதவாறு சூழலை, வாழ்வை அமைத்துக்கொள்ள வேண்டும்’.

நிச்சயமாக, இன்னொரு நபர், அது யாராகவேண்டுமானலும் இருக்கட்டுமே, கணவன் மனைவி என்ற குடும்ப பிரச்சனையில், தலையிடுவதை அந்த கணவன், மனைவியே தடுத்திட வேண்டும். அதை அனுமதிக்கக்கூடாது. அப்படி ஒருவரை அனுமதித்துவிட்டால், பிறகு எல்லா பிரச்சனைகளுக்கும் அவர் மூக்கை நுழைத்து, பஞ்சாயத்து என்ற நிலை வந்துவிட்டால், குடும்பத்தில் அமைதியும், நிம்மதியும் இருக்காது என்பதையும் நினைவில் கொள்க.  கணவன் மனைவி என்ற அழகான குடும்ப நிலையில் குழப்பம் விளைவிக்க நிறைய நபர்கள் ஆர்வமாகவும் இருப்பார்கள். அவர்களை ஒதுக்கித்தள்ளி, நீங்கள் உங்கள் அன்பால் பிரச்சனையை தீர்த்து, நிறைவாக வாழுங்கள். வாழ்வே எற்றமும், இறக்கமும் அமைந்ததுதானே?!

எனவே கணவன் மனைவி ஆகிய இருவருக்குமே தேவை மூன்றே மூன்று. அவை 1) பொறுமை 2) தியாகம் 3) விட்டுக்கொடுத்தல் ஆகும்!

வாழ்க வையகம், வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.

Post a Comment

0 Comments