நீங்கள் தனியாக தவம் செய்யும் பொழுது ஏற்படும் தடைகள் என்ன என்று சொல்லுங்களேன்?!
வணக்கம், அன்பர்களே, நம் வேதாத்திரிய யோகவழியில், தினமும் ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்துகிறோம் அல்லவா, அதில் இன்று கிடைத்த வாக்கின் விபரம் மற்றும் விளக்கம் காண்போம். கலந்துகொண்டோர் வாக்கு மொத்த எண்ணிக்கை 247Votes/18Likes.(இந்த பதிவு தரும் நேரத்தில் மட்டும்)
-
கிடைத்த சரியான வாக்கு /அதிகமான வாக்கு என்ன? பாருங்கள்.
அன்பர்களே, நீங்கள் தனியாக தவம் செய்யும் பொழுது ஏற்படும் தடைகள் என்ன என்று சொல்லுங்களேன்?!
நிறை சப்தம் இரைச்சல் பரபரப்பான சூழல்தான் தடை 31% (அதிக வாக்கு)
எப்போது தவம் செய்தாலும் படபடப்பாக இருக்கிறது 25% (சிறப்பு வாக்கு)
முதலில் நேரம் கிடைப்பதில்லை வேலைப்பளுவும் கூட 21% (சிறப்பு வாக்கு)
அன்பர்களே, குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் வழங்கிய, மனவளக்கலை வழியாக, எளியமுறை குண்டலினி யோகம் கற்றுவருகிறோம். இதில் கூட்டுத்தவமும், தனியான தவமும் செய்து, தன்னிலை விளக்கம் பெற முயற்சிக்கிறோம். நாம் தனியாக, வீட்டில் தவம் செய்ய நினைத்தால், மிக சிலருக்குத்தான் அந்த வாய்ப்பு கிடைக்கிறது என்று சொல்லுகிறார்களே என்றுதான் இந்த வாக்கு நிழந்தது.
இதை நாம் இன்னும் விளக்கமாக பார்க்கலாமே!
வாழும் உலகில், ஒவ்வொருவருக்கும் தினமும் பலவகை கடமைகள் நிச்சயமாக இருக்கின்றன. உண்மையாகவே அதற்கு ஒருநாளின் 24 மணி நேரம் போதாது என்பதுதான் ஏற்றுக்கொளக்ககூடியது. ஆனாலும், தன்னை அறியும் உந்துதல் காரணமாக, மனவளக்கலையிலும் நாம் இணைந்திருக்கிறோம். இதற்காக, எளியமுறை உடற்பயிற்சி, காயகல்பம், தவம் என்று தினமும் நேரம் ஒதுக்கிடவேண்டிய அவசியமும், அதை தொடர்ந்து கடைபிடிப்பதும் முக்கியமாகிறது. ஏனென்றால், தன்னை அறிவது என்பது பிறவிக்கடன் ஆகிற்றே?! அதை தீர்க்க வேண்டுமே?!
ஆனால் ஏதோவகையில் ஏற்பட்ட ஆர்வம், கொஞ்சம் கொஞ்சமாக தளர்வது இயல்புதான். அதாவது அந்த அளவிற்கு நாம் அப்படியாக பழகி வாழ்ந்து வருகிறோம் என்பதே உண்மை. அது காலப்போக்கில் இயல்பாக மாறிவிட்டது. ஆனால் முயற்சியும், ஆர்வமும், ஆராய்ச்சியும் இருந்தால், தினமும் இவற்றை செய்வதில் தடை நேருமா?
பெரும்பாலும் ஏதெனும் வகையில், சில நேரம் தாமதம், தடை உருவாகலாம். அது நம் வாழ்க்கைச் சூழல்தான். அதை ஏற்று திருத்தி, கொஞ்சம் முன், பின்னாக, பயிற்சிகளை மாற்றி அமைத்து நிறைவேற்றிக் கொள்ளலாம் தவறில்லை. இங்கே அதிகவாக்காக, நிறை சப்தம், இரைச்சல், பரபரப்பான சூழல் என்பதை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இவர்கள், அதிகாலையில் தவம் செய்வதை பழக்கமாக்கிக் கொண்டால் சரியாகிவிடும். இரண்டாவதாக, அடுத்தடுத்த வேலைகளை தக்கவைத்துக் கொண்டு, தவத்தில் அமர்வது வீண் முயற்சி. அந்தந்த வேலைகளை முடித்து, அமைதியாக இருந்தால் மட்டுமே தவம் இயற்ற நல்ல மனச்சூழல் அமையும். எனவே இருக்கும் வேலைகளை முடித்துவிட்டால், படபடப்பை குறைக்கலாமே.
நேரமின்மை, வேலைப்பளு எல்லோருக்கும் இருப்பதுதான். தவத்திற்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுத்தால், அதை எப்படி தவிர்த்திட முடியும்? எனவே வழக்கமான நேரமின்மை, வேலைப்பளு என்று சொல்லாமல், தவம் இயற்றிவிட்டு அவற்றை சரி செய்துகொள்வேன் என்ற சங்கல்பத்தை உருவாக்கிக் கொள்க. குழந்தைகள் அருகாமை, தனியிடம் கிடக்காமல் இருப்பது எல்லாம் சகஜமான ஒன்றுதான். குழந்தைகள் தூங்கும் நேரத்தில் தவம் இயற்றலாம். தனி இடம் கிடைக்காதவர்கள், அதிகாலை மற்றவர்களுக்கு முன்னால் எழுந்து, தவம் இயற்றினால் போதுமே! எனவே இருக்கும் சூழல்களை, நமக்காக, தவத்திற்காக மாற்றிக்கொள்ளவும் நாம் பழகிக் கொண்டால், நம் யோக பயணத்தில் தடைகள் எழாது, வராது, அமையாது என்பது உண்மை!
வாழ்க வையகம், வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.
0 Comments